Monday, December 6, 2010

சூரியனின் வலை வாசல்

சூரியனின் வலை வாசல்


தடம் மாறும் பண்டிகைகள்...

Posted: 10 Sep 2010 04:18 AM PDT

விநாயக சதுர்த்தி - எனக்கு பிடித்த பண்டிகைகளில் முதலாவது இடத்தை பிடிக்கும் பண்டிகை. சிறு வயது முதலே முழுமுதற்கடவுள் விநாயகன் மீது ஒரு வித தனி ஈடுபாடு. அது அவருடைய தொப்பையா, பெரிய காதுகளா, யானை முகமா, அவரை பற்றிய கதைகளா என இன்று வரை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.

எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகனை நினைத்து ஆரம்பித்தால் ஒரு வித கூடுதல் பலம் வந்தது போல உணர்வு. என் 3 வயதில் ஒரு பிள்ளையார் பொம்மையை தலையில் வைத்து கொண்டு வீடு முழுவதும் சாமி வருது சாமி வருது என்று சுற்று வேணாம், என் அம்மா சொல்வார்கள் (அதை போட்டு உடைத்ததும் நான்தான் என்றும் சொன்னார்கள்). 


பள்ளி பருவத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று தெருவில் விநாயகர் செய்யும் இடத்தில் அமர்ந்து அவர்கள் செய்வதை வெகு நேரம் வேடிக்கை பார்த்து, பின் அவர்களிடம் சிறிது களிமண் வாங்கி வந்து நானும் பிள்ளையார் செய்கிறேன் என்று ஒரு வித உருவத்தை செய்து (பிள்ளையார் பிடிக்க குரங்கு) அதையும் அடம் பிடித்து வீட்டு பிள்ளையாருடன் வைப்பதும், அந்த பிள்ளையார் கண்களை சேகரித்து வைப்பதும் இன்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.

வாலிபத்தில் விநாயகசதுர்த்திக்காக இளைஞர் நற்பணி மன்றத்தை கூட்டி நன்கொடை வசூலித்து பெரிய விநாயகர் சிலை வைப்பதும், அதற்கு இரண்டு பேர் DUTY போட்டு இரவில் காவல் இருப்பதும், ஐந்தாம் நாள் ஆட்டம் பாட்டத்துடன் அதை குளத்தில் கரைப்பதும் - அனுபவித்தால் தான் தெரியும் அந்த குதூகலம்.


ஆனால் இன்று யோசிக்கும் போது, நம் குழந்தைகள் இதை எல்லாம் அனுபவிக்கிறார்களா? பணத்திற்காக நாடு தாண்டியும், நகரத்திற்கு இடம் மாறியும் இருக்கும் நாம் இதை ஒரு கதையாக சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டோம். நம் குழந்தைகள்,  இந்த பண்டிகைகளை பற்றி அவர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு விவரிப்பார்கள்?

இன்றைய பண்டிகைகள் பெரும்பாலும் தனியார் தொலைகாட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே சென்று விடுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதும் இல்லை, சொந்தங்கள் கூடி பண்டிகை செய்வதும் இல்லை.

களிமண்ணில் செய்யும் பிள்ளையார்களி நலினம், இப்போழுது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை ரசாயண பூச்சுக்கள் கொண்டு அச்சில் உருவாகும் பிள்ளையார்களின் அழகுக்கு பல மடங்கு வேறுபாட்டு இருந்தாலும் முன்பு பெற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் இப்பொழுது இல்லை.

சுற்று சூழலை கெடுத்து மகிழ்ச்சி வாங்க முயன்று கொண்டு இருக்கிறோம். இது எவ்வளவு நாள் நிலைக்கும்?


இனியாவது, சுற்று சூழல் கெடாமல் களிமண் மற்றும் இயற்கை சாயங்களால் ஆன விநாயகர் சிலைகளை உபயோகிப்போம். முடிந்தால் நீங்களே விநாயகர் சிலைகளை செய்து பாருங்கள் அதை உங்கள் குழந்தைகளை பார்க்கசொல்லுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியே வேறு.

அடுத்து, மனிதர்களை காக்க கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற காலம் போய் இப்பொழுது கடவுள் சிலைகளை காக்க போலிஸ் காவல் வைக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.


அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான், வன்முறையை அல்ல. கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் உருவாக்கப்படும் வன்முறைகள் சமுதாயத்தின் கொடிய தொற்று நோயை போன்றது. தனிமனிதனை மட்டும் இன்றி ஒரு சமுதாயத்தையே அழிக்கும் வலிமையுடையது. இது தவிர்க்கபட வேண்டும். பண்டிகைகள் மகிழ்ச்சிக்குதானே தவிர மத வலிமையை காட்ட உருவானது அல்ல என்பதை உணர்ந்து சாதி மத பேதம் இன்றி ஒன்றாக கொண்டாட முயற்சிப்போம். நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.


அனைவருக்கும் விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்.

டிஸ்கி: இது என் 50வது பதிவு

No comments:

Post a Comment